பட்டாம்பூச்சி பட்டுடுத்த நாள் வந்ததடி!!
கட்டாந்தரையில் கூடுகட்ட ஆள் வந்ததடி!!
நாளை எண்ணியது நாளச்சுரப்பி
மலரான மொட்டு மணம்வீச!!
தமயன் தாங்கிக்கொள்ள ..
தாய்மாமன் ஏந்திக்கொள்ள..
தாழம்பூ தோரணமாய் ..
தடபுடலாய் படையலென..
மலருக்கு மணக்கோல அழைப்பை
மாலையிட்டு வரவேற்ற பூமியிது பூவே!!

மூலையில் முடங்கென்று
மூத்தோர் சொல்லவில்லை…
அடிவயிறு நோகுமென
அடுப்படி விடவில்லை…
உருக்குலைந்த உடலுக்கு தருவித்த
விடுமுறை – திண்ணை தீட்டானதடி!!

விஞ்ஞானம் தளைத்த வாழ்வுமுறை
மெய்ஞானம் திழைத்த தலைமுறை
ஆடவர் அறிந்திடாத ரகசியம் இல்லையடி
அட்சி(கண்) அயர்வே அடையாளமென
அளகே(பெண்மயிலே) இது அபத்தம் இல்லையென
ஆண்மை அறியுமடி
அசைகை(ஐயம்) வேண்டாமடி

தாண்டக் கூடதென தடையிட்ட கோடுகளை
தகர்த்து நடைபோடும் பெண்ணே
தீண்டக் கூடதென திரையிட்ட திசைகளை
திருத்தி நடைபோடும் பெண்ணே

மை எழுதியது போதும் கண்ணே
தீண்டாமைக்கும் தீண்டுபவருக்கும்
தீ எழுது கண்ணே
சுட்டிக்காட்டியது போதும் கண்ணே
சுட்டெரிக்க சூரியனை சூடிக்கொள் கண்ணே
சாயம் பூசியது போதும் பெண்ணே
காயம் வீசியது சூரியனே ஆயினும் சுட்டெரித்துவிடு

கவசமாய் காப்புக்கலை கற்றுக்கொள்வதைவிட
பூவைக் கசக்க கூடாதென புதல்வனுக்கு கற்றுக்கொடு
பதுமையின் புதுமை கண்ட பாரதமே!!
புண்ணிய பெண்மையும் புரிந்துகொள்வயோ!!